★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Friday, 15 July 2011

அகமுடையார் குல மங்கலங்கிழார்

                                                     வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார்




Mangalangkizar

தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர் "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என்ற பாரதிதாசனின் வாக்கிற்கிணங்க தொண்டின் திருவுருவாய்த் திகழ்ந்தவர் மங்கலங்கிழார். 



கல்வியே தெரியாத பாமர மக்களுக்குச் சிறந்த கல்வி அளித்து, அவர்களைச் சிறந்த புலவர்களாக்கிய இவர் தொண்டினை எண்ணுந்தோறும் என்னுள்ளத்தே அழுக்காறு ஏன் சுரக்காது?


யான் நூல்கள் யாத்தலிலும் மேடையில் பேசுவதிலுமே என் அறிவைச் செலவிட்டேன். ஆனால் கிழாரவர்கள் பல மணிமணியான புலவர்களைத் தயாரித்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமும் அவர்தம் பாரம்பரியம் நூற்றுக்கணக்கில் பல்கும் என்பதில் ஜயமில்லை. என் தொண்டினைவிடக் கிழாரின் தொண்டு சிறந்தது, என தமிழ்த் தென்றல் திரு.வி.க. தம் "சுயசரிதை"யில் எழுதியுள்ளார்.


வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில் ஜயாசாமி - பொன்னுரங்கம்மாள் என்னும் பெற்றோருக்கு 1895ல் மகவாய்ப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை பெரம்பூரில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். குடும்பச் சூழலின் காரணமாக கல்வியைப் பாதியிலேயே இழந்தார்.

கல்வியைத் தொடர முடியாத நிலையை எண்ணி, பல நாள்கள் வருந்தினார் மங்கலங்கிழார். அந்நிலையில் சென்னையில் டி.என்.சேஷாசலம் ஐயர் என்ற வழக்கறிஞர் தமிழ் மொழியின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தமிழ் மொழியின் இலக்கண - இலக்கியங்களைப் பாமரர்க்கும் மாணவர்க்கும் போதித்து வந்தார். இச்செய்தியை அறிந்து மங்கலங்கிழாரும் ஐயரிடம் மாணவராய்ச் சேர்ந்தார்.
"படிப்பவர் அனைவரும் வேலைக்காகப் படிக்கின்றனர்; தேர்வுக்காக வகுப்புகளில் ஒருசில தமிழ்ச் செய்யுள்களைப் படித்து அத்துடன் தமிழை மறந்து ஒதுக்கிவிடுகின்றனர்; ஏழை மக்கள் எதுவுமே படிப்பதில்லை; தாம் கற்ற கல்வி பிறர்க்கும் பயனுடையதாய் இருத்தல் வேண்டும். அதைப் பாமரர்க்கும் பரப்ப வேண்டும்," என்ற கொள்கையைக் கொண்டிருந்த ஐயரின் கொள்கை உறுதிப்பாடு மங்கலங்கிழாருக்கும் ஒருமித்த கருத்தாக இருந்தது. இதனால் இருவரும் சென்னையில் இரவு நேரப்பள்ளி ஒன்றை அமைத்து அதன் மூலம் தமிழ் மொழியைப் பரப்பி வந்தனர்.

மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் "கலா நிலையம்" என்ற இலக்கிய இதழ் உருவானது. தொடர்ந்து இதழ் வெளிவர தடை ஏற்பட்டதால், இந்நிலையைப் போக்க கலா நிலையம் குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்திப் பொருளீட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடமிட்டு நடித்தார். தொடர்ந்து இதழை வெளியிட முடியாத சூழ்நிலை உருவானது என்றாலும் அவரது இலக்கியப்பணி நின்றுவிடவில்லை. பள்ளி இளைஞர்கள் பலரை ஒன்று சேர்த்துத் தமிழ்ப் பண்டிதர்களாக உருவாக்கினார்.
"இலக்கணப்புலி" என்றழைக்கப்பட்ட கா.ர.கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

1922ல், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயாசாமி - அங்கம்மாள் தம்பதியரின் மகளான கமலம்மாளை மணந்தார். அதன் பின்னர் தச்சுத் தொழில் செய்துகொண்டே விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் பாடங்களைப் படிப்பதிலும், கேட்பதிலும், பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதிலுமே காலங்கழித்து வந்தார். கா.ர.கோவிந்தராச முதலியார் முயற்சியால் மங்கலங்கிழாருக்கு பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்தார்.
"செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.யுடன் நட்பு கொண்டு, அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சைவ, வைணவ நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிவு பெற்றார்.
வேதாந்தத் துறையில் சிறந்து விளங்கிய வடிவேல் செட்டியாரிடம் வேதாந்தம் கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு புளியமங்கலம் கிராமத்தில் தனது குடும்பத்தார் வழிவழியாகச் செய்து வந்த மணியக்காரர் பணியை ஏற்று நடத்தி வந்தார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார். வேதாந்தம் கற்ற அறிவினால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது. சின்மயானந்தரின் ஞான உபதேசத்தால் மீண்டும் சொந்த ஊரான புளியமங்கலத்திற்கே வந்து சேர்ந்தார்.
ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை என்ற ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தார். பிறகு ஊர், ஊராகச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். 1941ம் ஆண்டு குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு "அறநெறித் தமிழ்க் கழகம்" என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பு 16 ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மங்கலங்கிழார் திகழ்ந்தார். இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்கப்பட்டனர்.

இக்கழகத்தின் முதல் மாநாடு 1946ம் ஆண்டு குருவராயப்பேட்டையில் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், அடுத்த மாநாடு மு.வரதராசன் தலைமையிலும் நிகழ்த்தப்பட்டது. வசதியும், தேர்ச்சியும் உள்ள மாணவர்களைப், புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன் பயனாய் இருபத்தைந்து பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர். இவரின் விடாமுயற்சியால் நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.
ஏ.ச.சுப்பிரமணியம், ஏ.ச.தியாகராசன் உதவியுடன் தனியார் ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைத் திறந்து வைத்தார். அதன் பயனாய் ஆசிரியர்கள் பலர் உருவாயினர்.
அவர் காலத்தில் அமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் தலைமையில் தமிழர் மாநாடு ஒன்றை திருத்தணியிலும், அதன் பின்னர் ம.பொ.சி. தலைமையில் ஒரு மாநாடும் நிகழ்த்தினார்.
"வடக்கெல்லைப் படையெடுப்பில் எனது மெய்க்காவலராக இருந்தார் ஆசிரியர் மங்கலங்கிழார். அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும், தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்" என்று சிலம்புச் செல்வர் மா.பொ.சி. புகழ்ந்துள்ளார்.
 

  • தவளமலைச் சுரங்கம்
    தமிழ்ப் பொழில்
    சிறுவர் சிறுகதைகள்
    வடவெல்லை
    தமிழ்நாடும் வடவெல்லையும்
    சகலகலாவல்லிமாலை - விளக்க உரை
    நளவெண்பா - விளக்க உரை
    இலக்கண விளக்கம்
    இலக்கண வினா - விடை
    நன்னூல் உரை மற்றும்
    தனிக் கட்டுரைகள்

போன்றவை மங்கலங்கிழார் எழுதிய அரிய நூல்களாகும்.

சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்றார்.

"தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் அவர்களின் தன்னலங் கருதாது பணிபல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்" என்று டாக்டர் மு.வ. புகழ்ந்துள்ளார்.

1953ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் நாள் மாமனிதர் மங்கலங்கழார் இயற்கை எய்தினார். தம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார் என்றுமே போற்றி நினைவு கூரத்தக்கவர்.

எட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் மங்கலங்கிழார் பெயரில்

  • தொடக்கப்பள்ளி
    தெரு
    இலக்கிய மன்றம்
    நூல் நிலையம்
    உருவச்சிலை
    அறக்கட்டளை
    நற்பணி மன்றம்
    பூங்கா
    மாளிகை

போன்றவை அமைக்கப்பட்டிருந்தாலும் அவர் பிறந்த ஊரான புளியமங்கலத்தில் அவருக்கு எந்த அடையாளமும் கிடையாது. அங்கு இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அவரது பெயரிட்டு வழங்க ஆவன செய்தால், அவருக்கும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும் என்பதில் ஐயமில்லை.


 

No comments:

Post a Comment