★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Thursday, 14 July 2011

சொக்கம்பட்டி ஜமீன்

மந்திரியின் தந்திரம்

 எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி.கீதா சாம்பசிவம்

பழைய காலத்தில் தமிழ்நாட்டில் சிறந்த நிலையில் இருந்த ஜமீன்களுள் சொக்கம்பட்டி யென்பது ஒன்று. வடகரையாதிக்கமென்றும் அந்த ஜமீன் வழங்கப் படும். அங்கே இருந்த ஜமீன்தார்களுள் சின்னணைஞ்சாத் தேவர் என்பவர் புலவர் பாடும் புகழுடையவராக வாழ்ந்து வந்தார். அவரால் திருக்குற்றாலம், பாபநாச, திருமலை முதலிய தலங்களில் பலவகையான நிவந்தங்கள் அமைக்கப்பெற்றன. அவர் தண்டமிழ் வாணர்பால் அன்பு பூண்டு ஆதரித்துப் பெரும்புகழ் பெற்றார். மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர், செங்கோட்டைக் கவிராச பட்னாரம், கிருஷ்ணாபுரம் கவிராயர் முதலியோர் அவருடைய ஆதரவு பெற்றவர்கள். அக்காலத்தில் அவருடைய ஆட்சி சிறப்படைந்திருந்தது. ஒரு பெரிய அரசாங்கத்துக்கு உதாரணமாகச் சொல்லக் கூடிய நிலையில் அவருடைய சமஸ்தானம் விளங்கியது. அவ்வளவுக்கும் காரணம் அந்த ஜமீன்தாருடைய ஸ்தானாபதியாக இருந்த பொன்னம்பலம் பிள்ளை யென்பவருடைய அறிவாற்றலேயாகும்.

பொன்னம்பலம் பிள்ளை சிறந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர். வாசவனூர்ப் புராணத்தையும் வேறு பல தனிப்பாடல்களையும் இயற்றியிருக்கின்றார். அவர் வாசுதேவநல்லூரிற் பிறந்த வேளாள குலதிலகர். பேராற்றலும் அரசியலை ஒழுங்குபெற நடத்தும் மதியூகமும் அவர்பாற் பொருந்தியிருந்தன. அவருடைய நல்லறிவும் ஆட்சி முறையும் குடிகளுக்கும் சம்ஸ்தானாதிபதிக்கும் ஒருங்கே இன்பத்தை உண்டாக்கின.
பொன்னம்பலம் பிள்ளையின் அறிவின் திறத்தில் ஈடுபட்ட சம்ஸ்தானாதிபதியாகிய சின்னணைஞ்சாத் தேவர் தம் அமைச்சராகிய அவர் யாது கூறினும் அதன்படியே ஒழுகி வந்தார். அமைச்சருடைய சாதுர்யமான மொழிகளும் தமிழ்ப்புலமையும் அரசியல் யோசனைகளும் யாவரையும் வணங்கச் செய்தன. பிற சமஸ்தானத் தலைவர்களெல்லாம், "இத்தகைய அமைச்சர் ஒருவரைப் பெற்றிலமே!" என ஏங்கினர்.
அக்காலத்தில் இருந்த சேதுபதி மன்னர் பொன்னம்பலம் பிள்ளையை வருவித்து அவருடைய பெருமையை உணர்ந்து போற்றினார். அவரோடு ஸல்லாபஞ் செய்வதில் அரசருக்கு உயர்ந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. அடிக்கடி அவருடைய பழக்கம் இருக்க வேண்டு மென்பது சேதுபதி அரசர் விருப்பம். ஆயினும் தம்முடைய ஜமீந்தாரிடத்தில் அன்பும் அந்தச் சமஸ்தான நிர்வாகத்திற் கருத்தும் உடைய பொன்னம்பலம் பிள்ளை அங்ஙனம் இருப்பது சாத்தியமாகுமா? பலமுறை சேதுபதி விரும்பினால் ஒருமுறை சென்று சிலநாள் இருந்து வருவார். அப்பொழுது சேதுபதி மன்னர் அவரைத் தம்பாலே இருத்தி விடுதற்குரிய தந்திரங்கள் பல செய்தும் அவர் இணங்கவில்லை.
ஒருமுறை சேதுபதி அரசரிடம் பொன்னம்பலம் பிள்ளை வந்திருந்தபோது அவர் தம் ஜமீன்தாருடைய சிறந்த குணங்களைப் பற்றியும் தம் பாலுள்ள அன்பைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
"உங்களுடைய ஸம்மதம் இல்லாமல் சமஸ்தானத்தில் ஒரு காரியமும் நடைபெறாதாமே?" என்று கேட்டார் சேதுபதி.
"ஆம். ஆனால் அப்படி இருப்பது அதிகாரத்தினால் அன்று; அன்பினாலே தான். எங்கள் மகாராஜாவுக்கு நான் செய்வதிற்குறையிராது என்ற நம்பிக்கையுண்டு. நாடும் குடிகளும் நன்மை அடையவேண்டுமென்பதே அவர்களுடைய நோக்கம்; தாமே நேரில் அதிகாரம் செலுத்தவேண்டுமென்ற விருப்பம் அவர்களுக்கு இல்லை. யாருடைய அதிகாரமாக இருந்தால் என்ன? எல்லாம் அவர்களுடைய பெயராலேயே நடைபெறுகின்றன."
"அப்படியானால் உங்கள் ஜமீன்தார் உங்கள் யோசனையைக் கேட்டுத் தான் எல்லாக் காரியங்களையும் செய்வாரோ?"
"கூடியவரையில் அப்படித்தான் செய்வது வழக்கம். அவர்களிடம் நான் வெறும் சம்பளம் வாங்கும் மந்திரியாக மட்டும் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் என்னை ஆருயிர் நண்பனாகவே கருதியிருக்கிறார்கள். ஒரு சம்ஸ்தானாதிபதி, வியாஜம் ஒன்றும் இல்லாமல் ஒன்றுக்கும் பற்றாத என்னிடத்தில் இவ்வளவு அன்பு வைக்கும்போது என்னுடைய நன்மையைக் காட்டிலும் அவர்களுடைய நன்மையையே சிறந்ததாகக் கருதுவது என் கடமையல்லவா?"
"உங்களுடைய சமஸ்தானாதிபதியை ஒருமுறை பார்க்கவேண்டுமென்பது என் விருப்பம்."
"நன்றாகப் பார்க்கலாம். பரிவாரங்களுடன் சொக்கம் பட்டிக்கு விஜயம் செய்தால் மகாராஜாவை வரவேற்பதைக் காட்டிலும் சந்தோஷந்தரும் செயல் வேறொன்று இல்லை."
"நான் அங்கே வருவதைக் காட்டிலும், உங்கள் சம்ஸ்தானாதிபதி இங்கே வந்தால் நலம் அல்லவா?"
"அப்படியும் செய்யலாம். ஆனால் அதற்கு இது தக்க சமயமல்ல. மகாராஜா முறையாக அவர்களுக்குத் திருமுகம் அனுப்பி மரியாதையோடு வருவிக்க வேண்டும். அப்படிச் செய்தாலும் நான் அங்கே சென்று அவர்களை வரச்சொன்னால்தான் விஜயம் செய்வார்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் வரமாட்டார்கள்."
"நீங்கள் அவரை வரும்படி எழுதியனுப்பலாமே?"
"அவ்வளவு உரிமையை நான் மேற்கொள்ளுதல் பிழை. எங்கள் அரசரவர்கள் கருணை மிகுதியினால் எனக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதை நான் தவறாகச் செலுத்தலாமா? எனக்கு இணங்கி அவர்கள் நடந்தாலும் அவர்களோ அரசர்பிரான்; நான் ஊழியன். நான் என்னுடைய வரம்பு கடந்து நடக்கக் கூடாது. இங்கே வரும்படி நான் எழுதுவது உசிதமன்று."
"அப்படியானால், நானே திருமுகம் அனுப்பி வருவிக்கின்றேன்."
"மகாராஜாவின் திருமுகத்தைக் கண்டவுடன் அவர்கள் புறப்படமாட்டார்கள். என் விருப்பம் என்னவென்பது தெரிந்துதான் வருவார்கள்."
"உங்களுக்குத் தெரியாமலே நான் அவரை இங்கே வருவித்துவிடுகிறேன்." என்றார் சேதுபதி மன்னர்.
இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. சேதுபதி, சொக்கம்பட்டி ஜமீன்தாரை வருவித்துவிடுவதாக வீரம் பேசினார். அது முடியாதென்று பொன்னம்பலம் பிள்ளை கூறினார்.
மறுநாள் சேதுபதி வேந்தர் பொன்னம்பலம் பிள்ளை அறியாதபடி அவர் எழுதியதைப் போல் ஒரு திருமுகம் எழுதி ஆள்மூலம் சொக்கம்பட்டி ஜமீன்தாருக்கு அனுப்பினார். 'உடனே புறப்பட்டு இவ்விடத்திற்கு விஜயம்செய்யவேண்டும்' என்று பொன்னம்பலம் பிள்ளை எழுதினதாக அத்திருமுகம் அமைந்திருந்தது.
அதுகண்ட சின்னணைஞ்சாத் தேவர் அதுகாறும் சேதுபதியிடம் சென்றவரல்லராதலின் சிறிது மயங்கினார். அக்காலத்தில் சேதுபதியைப் போன்ற கெளரவம் சின்னணைஞ்சாத்தேவருக்கும் இருந்தது. 'இங்ஙனம் நம் அமைச்சர் எழுதுவதற்குக் காரணம் தெரியவில்லை. ஆயினும் அவர் நம் நன்மையைக் கருதியே ஒவ்வொரு காரியத்தையும் செய்வார். இப்படி அவர் முன்பு செய்தது இல்லை. எதற்கும் நாம் அங்கே அதிக ஆடம்பரமின்றிச் செல்வோம்' என்றெண்ணிச் சில வேலைக்காரர்களை மட்டும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
சொக்கம்பட்டியிலிருந்து ஜமீன்தாருடைய பல்லக்கு வருமென்றும், உடனே தமக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும், வந்தவருக்கு இடம் கொடுத்து உபசரிக்கவேண்டுமென்றும் சேதுபதி தம் அதிகாரி களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதிகாரிகளும் சின்னணைஞ்சாத் தேவரை எதிர்பார்த்திருந்தனர். தேவர் வந்து தமக்கென அமைத்திருந்த விடுதியில் தங்கினார். சேதுபதி வேந்தரைத் தாமே சென்று பார்ப்பது தம் கெளரவத்துக்குக் குறைவாதலாலும், தாம் தம் அமைச்சருடைய விருப்பத்தின்படி வந்திருப்பதாலும் அவர் அங்கேயே தங்கித் தம் அமைச்சரது வரவை எதிர்பார்த்திருந்தார்.
அவர் வந்திருப்பது பொன்னம்பலம் பிள்ளைக்குத் தெரியாது. பிள்ளையை வியப்படையுமாறு செய்யவேண்டுமென்று கருதிய சேதுபதி அவரையும் அழைத்துக்கொண்டு சின்னணைஞ்சாத்தேவர் தங்கியிருந்த விடுதிக்கு வந்தார். நெடுந்தூரத்தில் வரும்போதே தம்முடைய தலைவரைக் கண்டு கொண்ட பொன்னம்பலம் பிள்ளை, ஏதோ சூது நடந்திருக்குமென்று தெரிந்துகொண்டார். உட்புகுந்து சின்னணைஞ்சாத்தேவரருகிற் செல்லும்போது அவர் திடுக்கிட்டுப் போவாரென்று சேதுபதி நினைத்தார். அவரோ அங்கே சென்றவுடன், "ஏனடா சின்ன ணைஞ்சாத்தேவா! ஸமூகத்தில் செளக்கியமா?" என்று கேட்டார். ஸமூகம் என்பது சம்ஸ்தானாதிபதியைக் குறிப்பது. தாமே "ஸமூகமாக" இருக்கத் தம்மை இப்படி ஒருமையில் அழைத்துக் கேட்பதுபற்றி ஜமீன்தார் கோபம் அடையவில்லை. தாம் முன்னரே ஐயுற்றபடி ஏதோ சூழ்ச்சியினால் சேதுபதி தம்மை வரவழைத் திருக்கிறாரென்றும், தம் அமைச்சர் தக்க காரணங் கொண்டே அப்படிப் பேசுகிறாரென்றும் அவர் ஒரு கணத்தில் ஊகித்துக்கொண்டார்.
"எஜமான்! ஸமூகத்தில் செளக்கியமே. உங்களைப் பிரிந்திருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம்." என்று பணிவுடன் அவர் விடையளித்தார்.
"அப்படியா! விரைவிலே புறப்படவேண்டியதுதான்" என்று சொல்லிவிட்டுப் பொன்னம்பலம் பிள்ளை மேலே நடந்தார்.
சேதுபதி மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை; அவர் அதற்கு முன் சின்னணைஞ்சாத் தேவரைப் பார்த்தவரல்லர்; ஆதலின் அங்கே வந்தவரே ஜமீன்தார் என்று அறிந்துகொள்ளமுடியவில்லை. 'இவர் ஜமீன்தாராக இருந்தால், நமது முன்னிலையில் இந்த அமைச்சர் இப்படிப் பேசுவாரா? இவர் சம்ஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருக்கலாம். அமைச்சரை ஏமாற்ற எண்ணிய நாமே ஏமாந்து போனோம். அரசர் இவரைக் காட்டிலும் அறிவாளியென்று தெரிகிறது. தாம் வராமல் தம் பெயருள்ள ஓர் அதிகாரியை அனுப்பி விட்டார். இல்லாவிட்டால் இவ்வளவு சிறந்தவராகிய பொன்னம்பலம் பிள்ளைக்கு அவரிடத்தில் பற்று இருப்பதற்கு நியாயம் இல்லையே' என்று எண்ணினார். இருவரும் அரண்மனைக்கு மீண்டார்கள்.
பொன்னமபலம் பிள்ளை தனியே வந்து தம் சம்ஸ்தானாதிபதியைக் கண்டு பொய்த்திருமுகம் வந்ததும் பிறவும் தெரிந்து கொண்டார்; "நான் செய்த அபசாரத்தை மன்னிக்கவேண்டும். சமூகத்தின் கெளரவத்திற்கு இங்கெல்லாம் இவ்வளவு சுலபமாக வருதல் ஏற்றதன்று. அதனால், நான் இந்தத் தந்திரம் செய்தேன். சமூகத்திற்கு அகெளரவம் ஏற்பட்டாலும் அது நம் இருவருக்குந்தானே தெரியும்?? உரிமை பற்றியும், வேறு வழியில்லாமையாலும் இவ்வாறு செய்தேன். க்ஷமித்தருள வேண்டும்" என்று வேண்டினார்; தம்முடைய அருமைத் தலைவரை அவ்வாறு பேச நேர்ந்ததேயென்பதை நினைந்து நினைந்து உருகினார்.
சின்னணைஞ்சாத்தேவரோ சிறிதும் மனம் வருந்தாமல்," நீர் நம்முடைய மானத்தைக் காப்பாற்றினீர். நாம் தெரியாமல் செய்த பிழையை உம்முடைய சாதுர்யத்தால் மாற்றிவிட்டீர். நீர் உள்ளவரையில் நமக்கு என்ன குறை?" எனக்கூறித் தம் அமைச்சரைத் தேற்றினார்.
அப்பால் பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியிடம் தம் அரசர் தம்மை வரும்படியாகச் சொல்லி யனுப்பி யிருக்கிறாரென்று கூறி விடை பெற்றுக் கொண்டு, சம்ஸ்தான அதிகாரியாக நடித்த சின்னணைஞ்சாத் தேவருடன் சொக்கம்பட்டி போய்ச் சேர்ந்தார்.
(குறிப்பு: இவ்வரலாற்றை, திருவாவடுதுறையாதீன வித்துவானும் இப்பொழுது அவ்வாதீனத்தைச் சார்ந்த மதுரைக் கட்டளை விசாரணைத் தலைவராக இருப்பவர்களுமாகிய ஸ்ரீமத் சங்கரலிங்கத் தம்பிரானவர்கள் தெரிவித்தார்கள்.)

No comments:

Post a Comment