பிறந்த 72-நாட்களில் அரசரானவர்! 48 ஆண்டுகள் வாழ்க்கை! 24 ஆண்டுகள் சிறையில்!
இந்திய அரசு 30-03-2010-ல் ஐந்து ரூபாய் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
இராஜ இராஜேஸ்வர சேதுபதி என்கிற முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள், 30-03-1760.
தந்தை: நெருஞ்சித் தேவர், தாய்: முத்துவீராயி நாச்சியார். 48 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். 24 ஆண்டுகள் ஆங்கில அரசாங்கம் சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. முதலில் திருச்சியிலும், பின்னர் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் சிறை
வாழ்க்கை தொடர்ந்தது. மக்களின் வரி மறுப்பு இயக்கம் முதலான தொடர்ந்த போராட்டங்களைக் கட்டுப்படுத்த இயலாத பிரிட்டிஷ் அரசு வேறு வழியின்றி இவரை விடுதலை செய்தது. டச்சுக்காரர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்ட முதுராமலிங்க சேதுபதி, இராமநாபுரம் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றினை அமைத்துக் கொண்டார். பிரிட்டிஷ் அரசு 1795-ல் இவரது அரச பதவியைப் பறித்துக் கொண்டது.
இவரது சார்பாக தாயார் முத்துதிருவீராயி நாச்சியார் அரசாட்சி செய்து வந்தார். படைத் தளபதியாகப் பிச்சைப் பிள்ளை விளங்கினார்.
பிரதானி முத்திருளப்ப பிள்ளை அவரது உதவியாளர் கிருஷ்ணசாமி அய்யங்கார் மேற்படி ஆட்சிக்காலத்தில் பெருந்த் துணையாகத் திகழ்ந்தனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் 1892-ல் வெளியிடப்பட்டுள்ள அரசாங்க கெஜட்டில் உள்ளன. பிரதானி முத்திருளப்ப பிள்ளை, பெரிய சரவணக் கவிராயர் எழுதிய, பனைவிடு தூது என்ற காவியத்தில், அஷ்டாவதானி என்று போறறப் படுகின்றார்.
உலகப் புகழ் பெற்ற இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலின் மூன்றாவது சுற்றுப் பாதையை அமைத்திட்டவர் இராமநாபுரம் இராஜாவும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான, முத்துராமலிங்க சேதுபதிதான்.
690 அடி கிழக்கு மேற்காகவும், 435 அடி வடக்கு தெற்காகவும், 22 அடி 7.5 அங்குல உயரத்திலும் எழிலோடு அமந்துள்ளது மூன்றாவது சுற்றுப் பாதை. பார்த்து ரசித்துக் காத்திட வேண்டியது நமது கடமை.
வேலு நாச்சியார் வரலாறு ஜீவபாரதியால் விறுவிறுப்பான வரலாற்று நாவலாக்கப் பட்டுள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலு நாச்சியார் என்றே கருதப் படுகின்றது.
சரித்திர ஆய்வாளர்கள் ஆராய முற்பட்டால், அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த, முத்துதிருவீராயி குறித்தும் பல்வேறு தகவல்கள் கிடைக்கக் கூடும். பாலகனுக்குப் பிரதிநிதியாகச் செங்கோலோச்சிய காரிகை வாளேந்திப் போராடாமல் இருந்திருக்க முடியாது.
முத்திருளப்ப பிள்ளை, முத்துவீராயி வரலாற்று நாவல்களுக்கான கதைக்களம்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் முன்னேற்ற நிறுவனம் (தன்னாட்சி) இயங்கி வருகின்றது. 2007-ல், தென்னிந்தியாவில் விடுதலை போராட்டம் என்றதொரு சிறு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.
முதுராமலிங்க சேதுபதி மறைவு குறித்த விபரங்கள் விக்கிபீடியாவிலும் இல்லை. அஞ்சல் தலை வெளியீட்டுச் செய்தியிலும் இல்லை. ரா.தே.மு.நி. வெளியிட்ட நூலிலும் இல்லை. இந்த நூல் 12-வயதில் மன்னராக்கப் பட்டதாகக் கூறுகின்றது. ஆனால், பிறந்து 72 நாட்களில் முடி சூட்டப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கின்றது.
எது எப்படி இருந்தாலும், இளவயதில் முதுராமலிங்க சேதுபதி அரியணை ஏறியதும், சிறை சென்றதும், மொத்தத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் விடுதலை வீரராகத்
திகழ்ந்ததும் மறுக்க முடியாத உண்மை.
இவரது திரு உருவம், மற்றும் இவரது ஆட்சிக்கு உதவியோர் உருவங்களுடன் சிலைவடிவாக இராமேஸ்வரம் திருகோவிலில் இன்றும் காட்சிக்கு உள்ளன.
புனிதப் பயணம் இறை பக்திக்கு மட்டும் தானா? தேச பக்திக்கும் இருக்கலாமே!
இராமேஸ்வரம் செல்வோம்! விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திடுவோம்!
No comments:
Post a Comment