முல்லைப்பெரியாறு அணையை காக்க ம.தி.மு.க. 21-ந்தேதி முற்றுகை போராட்டம்: வைகோ அறிவிப்பு
சென்னை, டிச.4-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவோம் என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு அந்த அக்கிரமத்தை செயல்படுத்த மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலைமை நமக்கு மிகுந்த கவலையை தருகிறது. 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணை இந்தியாவில் உள்ள அணைகளிலேயே மிகவும் வலுவான அணையாகும். 7 ரிக்டர் அளவுக்கு பூகம்பமே வந்தாலும் நமது அணை சேதம் அடையாது.
இந்த பகுதியில் 3.5 ரிக்டருக்கு மேல் பூமி அதிர்ச்சிக்கு வாய்ப்பில்லை. 5 ரிக்டர் ஏற்பட்டால் குமுளிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும், 550 அடி உயரத்திற்கு கேரளம் கட்டியிருக்கின்ற இடுக்கி அணைக்கும் சேதம் ஏற்படலாம். நமது அணைக்கு எந்த சேதமும் வராது.
குமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை சாணலில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைத் தரமறுக்கும் கேரளம், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய அனுமதி வழங்க மறுக்கும் கேரளம், கொங்குச் சீமையில் பாம்பாற்றுக்கு குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கேரளம், நல்லாறு இடமலை ஆறு பிரச்சினையில் வஞ்சகம் செய்யும் கேரளம், முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில் ஈடுபட்டு விடாமல் தடுக்க நாம் அறப்போர் களம் காண வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
அணையை உடைத்தால் நிரந்தரப் பொருளாதார முற்றுகைக்கு கேரளம் ஆளாகும் என எச்சரிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் அறப்போரை கடந்த 2010 மே 28-ம் நாள் நடத்தினோம்.
அதேபோல வருகிற 21-ம் தேதி நடத்திடத்திட்ட மிடப்பட்டுள்ளது. அன்றைய போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைப்புகளும் இந்த அறப்போரிலும் பங்கேற்க உள்ளன. தென்தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையைக்காக்க இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் விவசாயப் பெருமக்களும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
திராவிடராக பிறந்திருந்த போதிலும் தமிழர் துயர்துடைக்க போராடும் வைகோ அவர்களுக்கு மறத்தமிழர் சேனை-maraththamilar senai நன்றி கூறுகிறது.
No comments:
Post a Comment